05 September 2015

நகர்வலம் by சுஜாதா

(This story is reproduced as is how is from Sujatha's Vignana Sirukathaikal anthology, for reader's delight, not for any commercial intent or purpose)
அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக ஏற்பட்ட பெரிய படகு அது. அதன் மேல்தளத்தில் மிகவும் இயல்பான நிலையில் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் சூரிய வெளிச்சத்தில் படுத்துக்கொண்டும் ஒரு கனவுச் சதுரம் போலிருந்த சிறிய நீச்சல்குளத்தில் (வெந்நீர்) சோம்பேறித் தனமாக நீந்திக்கொண்டும் இருந்த சந்தோஷ மனிதர்களில் ஆத்மா நித்யாவுக்காகக் காத்திருந்தான். தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனம் இல்லாமல்… எதிரே நீந்திக்கொண்டு இருந்த நித்யாவின் அவ்வப்போது தெரிந்த உடல் வடிவ அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தான். படகு அத்தனை வேகத்தில் செல்வது தெரியவே இல்லை. அதன் வயிற்றில் இருந்த சிறிய அணு மின்சார நிலையத்தின் சக்தியில் அது கடல் பரப்பின்மேல் ஒரு காற்று மெத்தையில் மிதந்து சென்றது.

ஆத்மாவுக்கு அந்தப் பிரயாணம் அவன் வாழ்வின் ஆதர்சங்களில் ஒன்று… இன்னும் பதினைந்து நிமிடங்களில் படகு சென்னையை அடையப்போகிறது.

சென்னை!

அவன் முன்னோர்களின் ஊர்! அவன் தாத்தாவுக்குத் தாத்தாவுக்குத் தாத்தாவுக்கு… அவர்கள் குடும்பத்துக்கு ஒரு வீடு அங்கே இருந்திருக்கிறது. அது என்ன இடம்? திருவல்லிக்கேணி… தேரடித் தெரு… கோயிலின் அருகில்…கம்ப்யூட்டர் தந்த விவரம்…

மார்பில் ‘வழிகாட்டி‘ என்ற வாசகம் எழுதப்பட்ட ஓர் இளைஞன் ஆத்மாவுக்கு முன்னால் வந்து புன்சிரித்து, ”எல்லாம் சௌகர்யமாக இருக்கிறதா?” என்றான்.

ஆத்மா தலையசைத்தான்.

”உங்கள் மனைவி இந்தப் பிரயாணத்தை மிகவும் ரசித்திருக்கிறார் என நினைக்கிறேன்” என்று நீச்சல் குளத்தில் அம்புபோல் குதித்த நித்யாவைப் பார்த்துச் சொன்னான். நித்யா தண்ணீரிலிருந்து தலை தூக்கி ”ஆத்மா, நீயும் வாயேன்” என்றாள்.

ஆத்மா தலையசைத்தான்.

மெலிதான கடல் காற்று அவன் கேசங்களை அலைக்கழித்தது. அவனுள் இன்பம் பொங்கியது.

”எப்போது சென்னைக்குப் போய்ச் சேருவோம்?”

”இன்னும் பதின்மூன்று நிமிஷங்களில்…”

எதிரே பார்த்தான். சூரியன் ஜரிகையிட்ட கடல் சோம்பேறித்தனமான ஆரஞ்சுப் படுதாவைப் போலப் புரண்டுகொண்டு இருந்தது. வெண்பறவைகள் சீராகப் பறந்துகொண்டு இருந்தன. ஓசோன் வாசனை ஆத்மாவுக்குப் பிடித்திருந்தது.

ஓலிபெருக்கி உயிர் பெற்றது.

”கவனியுங்கள்.. அன்புள்ள பிரயாணிகளே! கவனியுங்கள்! மகிழ்ச்சிப் பகுதியில் ஆனந்தப் படகில் சென்னை நகரத்தைக் காண வந்திருக்கும் உங்களுக்குப் படகின் தலைவருடைய வணக்கங்கள். இந்தப் படகு உங்கள் சொந்தப் படகு. இதில் கிடைக்காதது எதுவும் இல்லை. நவீன விஞ்ஞானத்தின் நவீன அதிசயம் இது. ஐந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் நாம் சென்றுகொண்டு இருக்கிறோம். இந்தப் படகுகடல் மேல், கடலுக்குள், ஏன் மணல்மேல்கூடச் செல்லக்கூடியது…

”சென்னை நகரின் பல பகுதிகளைக் காண இன்று வந்திருக்கும் உங்களுக்குச் சென்னையைப் பற்றிய அறிமுகம் தேவை என்றால் உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒலிப்பெட்டியை இணைத்துக் கொள்ளலாம்… வந்தனம்.”

ஆத்மா சென்னை நகரைப் பற்றி முழுதும் படித்துவிட்டான். இருந்தும் மறுபடியும் மறுபடியும் தன் நகரத்தைப் பற்றிக் கேட்க அவனிடத்தில் ஆவல் மிச்சம் இருந்தது. ஒலிப்பெட்டியை இணைத்துக்கொண்டான். மெலிதான வற்புறுத்தும் குரலில் சங்கீதப் பின்னணியுடன் அது அவன் காதுகளுக்குள் மட்டும் ஒலித்தது.

‘தென்னிந்தியாவின் மகத்தான நகரமாக இருந்த சென்னை அல்லது மதறாஸ் தார்மல அய்யப்ப நாயக்கன் என்பவர் 1639-ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி ஃப்ரான்ஸிஸ்டே என்பவருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவதற்கு அனுமதி தந்ததற்கு முன்னமேயே இருந்திருந்தாலும், அதன் சரித்திரம் அப்போதுதான் தொடங்குகிறது…

”டே என்பவர் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக இருபத்தைந்து ஐரோப்பியச் சிப்பாய்களுடனும் நாகபட்டன் என்கிற இந்திய வெடிமருந்து தயாரிப்பவருடனும் 1640-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி அங்கே வந்து சேர்ந்தார். செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதி 1640-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதிமுடிவுற்றது…”

நித்யா தன்னைத் துடைத்துக்கொண்டு வந்து அவன் காது அருகில் முகத்தோடு முகம் ஒட்டிக்கொண்டு அவன் என்ன கேட்கிறான் என்பது மாதிரிப் பார்த்தாள்.

”மதறாஸ் பட்டணம் என்பதுதான் அதன் பழைய பெயர். இந்தப் பெயரின் ஆதாரம் சரிவரத் தெரியவில்லை. மத்த ராஜு என்று அந்தப் பகுதியின் அரசன் ஒருவன் பெயரிலிருந்து ஏற்பட்டு இருக்கலாம்… அல்லது கடலில் சென்ற மரக்கால் ராயர்கள் என்கிற ஓர் இனத்தின் பெயரிலிருந்து மரக்கால் ராயர் பட்டணம் என்று தொடங்கி மதறாஸ் பட்டணம் என்று மாறி இருக்க லாம்…”

நித்யா அவனைச் சீண்டினாள்… ஆத்மா ஒலிப்பெட்டியைக் குறைத்தான்.

”எத்தனை தடவை இந்தச் சென்னைச் சரித்திரத்தையே கேட்டுக்கொண்டு இருப்பாய்? எனக்கு அலுத்துவிட்டது!”

”இது நம் நகரம் நித்யா! நம் வீட்டுக்குப் போகப்போகிறோம்!”

”உங்கள் முன்னோர் வீட்டில் என்ன பார்க்கப் போகிறாய்? பிற்காலத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் இந்தச் சந்ததியில் ஆத்மா என்று ஒருவன் பிறக்கப்போகிறான் என்று சுவரில் எழுதி வைத்திருப்பார்களா?”

”முதலில் அந்த வீட்டைக்கண்டு பிடிப்பதே கடினமாக இருக்கும்! எந்த நிலையில் இருக்கிறதோ… பெரும்பாலான கட்டடங்கள் பத்திரமாக அன்று இருந்தது போலவே இருக்கின்றனவாம்… அந்த வழிகாட்டி உன்னை விசாரித்தான்…”

”ஆம். அவன் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.”

”அது உனக்கு எப்படித் தெரியும்?”

”நான் பார்த்த திசையில் எல்லாம் அவன் தெரிந்தான்.”

”மார்பை மூடிக்கொள், ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும்.”

”எனக்குப் பசிக்கிறது.”

”கீழே சென்று ஏதாவது சாப்பிடு. நான் கேட்டுவிட்டு வருகிறேன். ஐந்து நிமிஷங்களில் வந்துவிடு… சென்னை வந்துவிடும்.”

ஆத்மா மறுபடியும் ஓலிப்பெட்டியை இணைத்துக்கொண் டான்.

”மைலாப்பூரில் லாஸரஸ் தேவாலயத்துக்கு அஸ்திவாரம் தோண்டும்போது மான்யுவல் மத்ரா என்பவரின் கல்லறைதென் பட்டதாம். மத்ராவின் குடும்பம் ஒரு பெரிய செல்வாக்குள்ள குடும்பம். எனவே நகரத்தின் பெயர் மத்ராவின் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என நினைக்கலாம்…

மதர்ஸா என்பதற்குப் பெர்சிய மொழியில் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி என்று அர்த்தம். ஒரு பழைய முகம்மதியக் கல்லூரி அங்கு இருந்திருக்கலாம். இதிலிருந்து மதறாஸ் என்ற பெயர் தோன்றி இருக்கலாம் எனவும் எண்ணக்கூடும்.


எனினும், சென்னைப் பட்டணம் என்ற பெயரே பிற்பாடு நிலைத்து சென்னை என்று மாறியது. இந்தப் பெயரைப் பற்றிச் சந்தேகம் இல்லை. தார்மல சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கரின் நினைவில் சென்னப் பட்டணம் என்று பெயர் பெற்று, சென்னை ஆயிற்று…”

அவர்கள் ஒவ்வொருவராகப் படகின் மேல் அடுக்குக்கு வந்து கொண்டு இருந்தார்கள்… சென்னையை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம்! ஆத்மாவின் உள்ளம் துடித்தது… தன் அன்னையை நோக்கிப் போவது போல உணர்தான்.

எத்தனை தூரம் வந்திருக்கிறான். இந்தப் பிரயாணத்துக்காக..! அஸ்ட்ரா 7-ல் அவனுக்கு விடுமுறை கிடைத்து, நித்யா வுக்கு விடுமுறை கிடைத்து, அங்கிருந்து ஷட்டில் பிடித்து ஸ்பேஸ் நிலையத்துக்கு வந்து அங்கே ரிசர்வேஷன் கிடைக்காமல் அந்தரத்தில் தொங்கும் அந்த பிளாட்ஃபாரத்தில் இரண்டு தினங்கள் கழித்து இடம் கிடைத்து, கிரகப் பிரயாணக் கப்பலில் பூமிக்கு வந்து… மற்றொரு பூமிப்பிரயாணம் செய்து… ஒரு வாரமாக ஓட்டல்கள், பழக்கம் இல்லாத பிரயாணங்கள், பழக்கம் இல்லாத அறைகள்… முகங்கள்…

”ஏன் தான் உனக்கு இந்தப் பிடிவாதமோ! விடுமுறையை வீணடிக்கிறாய். எத்தனையோ புதிய இடங்களுக்குச் சென்று இருக்கலாம்… ஹீலியாஸ் என்கிற புதிய காலனி அப்படித் தேவலோகம் போல இருக்கிறதாம். நீயும் உன் சென்னையும்! சரித்திரத்தைக் கட்டிக்கொண்டு அழு!”

”உனக்கு இஷ்டம் இல்லை என்றால் நீ தனியாகப் போயிருக்கலாமே நித்யா!”

”ஆம், தெரியாத்தனமாகத்தான் வந்துவிட்டேன். பூமியே போர் அடிக்கிறது.”

சென்னை கண்டுபிடிக்கப்பட்ட செய்தி அஸ்ட்ராவில் கிடைத்தது முதலே அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. அதற்காகப் பணம் சேர்த்து, விடுமுறை சேர்த்து… வந்து சேர்ந்துவிட்டான்.

வழிகாட்டி தென்பட்டான். அத்மா அவனைக் கூப்பிட அவன் புன்சிரிப்புடன் வந்தான்.

”நீ சென்னை நகரைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?”

”தினம் ஒரு தடவை… அதுதானே என் தொழில்.”

”நகரின் பல பகுதிகளும் உனக்குத் தெரியுமல்லவா?” அவன் சிரித்து. ”ஹைகோர்ட், சாந்தோம், அண்ணாசாலை, வள்ளுவர் கோட்டம், கபாலீஸ்வரர் கோயில், கந்தசாமி கோயில், கோட்டை… என்ன வேண்டும் உங்களுக்கு..?”

”திருவல்லிக்கேணி தெரியுமா?”

”பார்த்தசாரதி சாமி கோயில் இருக்கிறது.. மூன்றாவது குழுவில் சேர்த்துக்கொள்வார்கள்…”

”அங்கே தேரடித் தெருவில் ஒரு வீடு…”

”வீடா!” என்றான் ஆச்சர்யத்துடன்.

”ஏன்!”

அவன் பதில் சொல்வதற்கு முன் ஒரு சைரன் ஒலித்தது. ”கவனியுங்கள்… கவனியுங்கள்… படகின் மேல் ஓரங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்… விலகிக்கொள்ளுங்கள்… படகு மூடிக்கொள்கிறது…”

மேல் தளத்தில் இருந்த அனைவரும் நடுவே சேர்ந்துகொண்டார்கள். ம்ம்ம்ம்ம் என்று இயந்திர முனகல் கேட்க ஒரு பிளாஸ்டிக் கண்ணாடிச் சுவர் அரைச் சதுர வில்லையாக உயர்ந்து வளைந்து படகின் மேல் தளத்தை முழுவதும் மூடிக்கொண்டது… திடீரென மௌனமும் எதிர்பார்ப்பும் அவர்களிடையே பரவியது.

”கவனியுங்கள்! கவனியுங்கள்! படகு கடலுக்குள் செல்லப்போகிறது, இன்னும் மூன்று நிமிடங்களில் நாம் சென்னை நகரை அடையப் போகிறோம்… இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியில் கடலில் மூழ்கிய சென்னை நகரத்தின் புராதனக் கட்டடங்கள் நவீன ரசாயனத்தின் உதவியால் பாசி நீக்கப்பட்டு. மாசு நீக்கப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டு… உங்களுக்காகக் காத்திருக்கிறது… உங்கள் படகு அமிழ்ந்து சென்னை நகரின் புராதன வீதிகளின் ஊடே செல்லும்… அவ்வப்போது கட்டடங்களின் வருணனை கிடைக்கும். நாம் இன்னும் இரண்டு நிமிஷங்களில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அணுகுவோம்..!”

அந்தப் படகு நீரில் அமிழ்ந்தது.

கடல் இப்போது வெள்ளி ஜரிகையிட்டு மெதுவாகப் புரண்டு… மிக அமைதியாகவே இருந்தது.


No comments:

Labels

1980s (1) 1990s (4) 1992 (1) 1996 (1) 1997 (1) 2003 (1) 2005 (1) 2015 (10) 2016 (1) 2020 (1) 2023 (1) 20th century (1) 21st century (1) Absurd (1) AI (1) American Fiction (1) American Literature (1) Anna Funder (1) Art (2) Berlin Wall (1) Bible (3) Book Review (1) ChatGPT (1) Chennai (1) Children (3) Comedy (1) Contemporary (1) Contemporary Fiction (2) Contemporary Poetry (4) Criticism (1) Critique (2) Dan Brown (1) DDR (1) Drama (2) East Germany (1) Edutainment (3) English (8) European Drama (1) Farce (1) Fiction (6) Free Verse (2) Friedrich Dürrenmatt (1) German Drama (1) German history (1) Germany (1) Girish Karnad (1) Grotesque (1) Guggenheim (1) Haiku (1) History (1) Holocaust (1) Indian Drama (1) Indian Fiction (1) Indian Literature (3) Indian Poet (3) Indian Theatre (1) Indian Writing (7) Installation Art (1) Iyyappa Madhavan (1) K-21 Düsseldorf (1) KK (11) Krishna Kumar (10) Literature (2) Marcus Zusak (1) Modern (1) Modern Art (1) Modern Fiction (1) Modern Poetry (4) Mohan Narayanan (1) Naga-Mandala (1) Naveenam (1) non-fiction (1) Novel (2) Observations (1) Old Testament (3) Parody (1) Performance (1) Performance Art (1) Performance Arts (1) Performance Studies (1) Poet (1) Poetry (6) Post-colonialism (1) Post-modernism (1) Post-structuralism (1) post-WW II Germany (1) Presentation (2) Rangarajan (1) Satire (1) Sci-Fi (1) Science Fiction (1) SciFi (1) Selected Poems (7) Short Story (4) Stasi (1) Sujatha (1) Swiss Drama (1) Switzerland (1) Symposium (1) Tamil (1) Tamil Poetry (1) The Payyoli Pendant (1) Theater (1) Theatre (2) Thomas Berger (1) Tragedy (1) Translation (1) Who Is Teddy Villanova (1) Writer (1) Y2K (1)